10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்


மாவட்ட ஊராட்சி தலைவர் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


சாதாரண நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் செலுத்த வேண்டிய வைப்பு தொகை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போட்டியிடும் பதவிக்கு ஏற்ப 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வேட்பாளருக்கான தொகையும் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்புக்கான தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் செலவுக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


முன்னோடி திட்டமாக, கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 114 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.