விவசாய நிலங்களில் நுழைந்த தண்ணீரால் 500 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு


நாகை மாவட்டம் சீர்காழி அருகே வடிகால் வசதி சரியில்லாததால் ஆற்று நீர் உட்புகுந்து 500 ஏக்கர் அளவில் சம்பா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.


பழையபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உப்பனாறு கரையின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடி செய்து உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.


அப்பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், முறையாக தூர் வாராத காரணத்தால் ஆற்றின் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.


வடிகால் வசதி முறையாக செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு உதவிட வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.