தேசப்பற்றிற்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், கவிப்புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பாரதியாரின் 138ஆவது பிறந்தநாளையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியிருக்கிறார். மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின், எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதியையும், சமத்துவத்தையும், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக, சுப்பிரமணிய பாரதி நம்பினார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார். "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற அவரது கூற்று, மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க, மகாகவி பாரதியார் கொண்டிருந்த பார்வையை விளக்குவதாக அமைந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார்.