மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்


எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பலத்த எதிர்ப்பு மற்றும் அமளிக்கு மத்தியில், குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து வந்த முஸ்லீம்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கான சட்ட திருத்த மசோதாவை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது.


அதன்படி, முதல் கட்டமாக, மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ், வடகிழக்கு பிராந்திய கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரானது என்று காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டினார். இந்த மசோதா மதசார்பின்மைக்கு வேட்டு வைப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.