ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசு பள்ளிகளின் வளாகங்களிலும் மழைநீர் குளம் போல தேங்கி கிடப்பதால் அருகிலுள்ள வேறு கட்டிடத்திலும், மரத்தடியிலும் வைத்து மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தரப்படும் நிலை காணப்படுகிறது.
ராமநாதபுரம் என்றதும் அந்த மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் தீவுதான் நமது நினைவுக்கு வருவது வழக்கம். அந்தத் தீவு போல, சுற்றிலும் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கின்றன ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசு பள்ளி வளாகங்கள்.
ராமநாதபுரத்தை அடுத்த புதுமடத்திலுள்ள அரசு துவக்க பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.
இதனை கடந்து வகுப்பறைக்குள் செல்ல முடியாது என்பதால் அருகாமையிலுள்ள மற்றொரு கட்டிடத்தில் ஒரே வகுப்பறைக்குள் 174 பிள்ளைகளை வைத்து 5 ஆசிரியர்கள் வகுப்பெடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம மக்களே மோட்டார் என்ஜின் மூலம் மழை நீரை அப்புறப்படுத்தினர்.
மழைநீர் குளம் போல தேங்கி கிடப்பது போதாது என்று, அந்த பள்ளி வளாகத்திற்குள் தென்னை ஓலை, சிரட்டை ஆகியவையும் குவிந்து கிடக்கின்றன. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் காணப்படுகிறது.
இதுகுறித்து சத்துணவு பெண் ஊழியரிடம் கேட்கப்பட்டதற்கு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், அதுதொடர்பாக அதிகாரிகளிடமும் தெரிவித்தும் பலனில்லாததால் அடுப்பெரிக்க தென்னை ஓலைகள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுஒருபுறம் என்றால், இரட்டையூரணி அரசு மேல்நிலை பள்ளிக்குள் செல்லவேண்டுமெனில் நீச்சலடித்தே செல்லவேண்டும் என்பதுபோல முகப்பு சாலையிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இடுப்பளவு மழைநீர் தேங்கி கிடக்கிறது.
இதனாலும், பள்ளியின் மேற்கூரை உடைந்து விழுவதாலும் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர். பிற வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மரத்தடியில் பாடம் கற்றுத் தருகின்றனர்.
இதே நிலைதான் பேராவூர் உயர்நிலைப்பள்ளி, நொச்சிவயல் துவக்க பள்ளி,சக்கரக்கோட்டை துவக்கப்பள்ளியிலும் காணப்படுகிறது. அரசு பள்ளி வளாகங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றி மாணவ மாணவிகளுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.