குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - வானிலை மையம்


குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கடவூர், சாத்தூர், கொட்டாரத்தில் தலா 2 செ.மீட்டரும், ராமேசுவரத்தில் 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


குமரிக்கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், தென் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


குமரிக்கடல் பரப்பில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை நகரை பொறுத்தவரை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகப்பட்ச வெப்பநிலை 89.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.