செராமிக் ஆலை தீ விபத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் காரைக்காலைச் சேர்ந்த இளைஞரின் பெயர்


சூடான் நாட்டில் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காணாமல் போனவர்களின் பட்டியலில் காரைக்காலைச் சேர்ந்த இளைஞரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. 


பயங்கர தீ விபத்தில் மொத்தம் 18 இந்தியர்கள் உள்பட 3 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் அவர்களில் இருவர் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிச் செய்யப்பட்டது.


இந்த நிலையில் தீ விபத்தில் காணாமல் போனவர்களின் பட்டியலில் புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த வெங்கடாசலம் என்ற இளைஞரின் பெயர் உள்ளது. ஐ.டி.ஐ படித்துள்ள வெங்கடாசலம் குடும்ப வறுமை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் சூடானுக்கு சென்றுள்ளார்.


திருநள்ளாறு வட்டாட்சியர் வெங்கடாசலத்தின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். வெங்கடாசலத்தின் நிலை குறித்து மத்திய அரசு வெளியுறவுத்துறை மூலம் தெரியப்படுத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.