சிவகங்கை மாவட்டத்தில் வியாபார ரீதியாக சவுடு மண் எடுக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை இன்று மதுரை நீதிமன்றத்திற்கு வந்தப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுடுமணல் கொண்டு செல்வதை தடுக்கும் பணிகளில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்புக்குட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள பட்டா நிலங்களில் சவுடுமண் எடுக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், தொடர்ந்து சவுடு மணல் கொண்டு செல்வது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, மாவட்டம் முழுவதும் வியாபார ரீதியாக சவுடு மணலை அள்ளுவதற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஜனவரி 6ந் தேதி அன்று பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.