தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக 27 மாவட்டங்களில் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்பிட இத்தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்ட தேர்தல் 24,680 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் 25,008 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 49,688 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது.
முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள், 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் 17-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாளாகும்.
27, 30-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஜனவரி 2-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6-ந்தேதி பதவி ஏற்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி மன்ற தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.