சான்மீனா தொழிற்சாலையில் VRS 'விருப்ப ஓய்வு' அறிவிப்பு
ஒரு பக்கம், 2014ல் மூடப்பட்ட நோக்கியா ஆலையை வாங்கப் போவதாக சால்காம்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம் பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் சார்ஜர்களை சென்னையில் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக உள்ள சான்மீனா தொழிற்சாலை நிர்வாகமோ 5 வருடங்கள் முடித்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு VRS அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி நிர்வாகம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் தற்போதுள்ள 500க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களை குறைப்பதற்காகவே நிர்வாகம் இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
சான்மீனா நிர்வாகம் 5 வருடங்கள் முடித்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு VRS திட்டம் அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் பணி புரிந்த ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ1 லட்சம் விகிதம் 10.5 லட்ச ரூபாய் வரை விருப்ப ஓய்வு இழப்பீடாக கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி பணியை விட்டு நீங்குபவர்கள் டிசம்பர் 2 முன்னர் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நவம்பர் 29 – 1 மணிக்கு முன்னர் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களுக்கு 'Early Bird Offer Incentive' ஆக ஊக்குவிப்பு தொகையும் கொடுப்பதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஊக்குவிப்பு தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமல்லாமல், இவ்வாறு கொடுக்கப்படும் திட்டம் கடைசி திட்டமாக இருக்கும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நிரந்தரத் தொழிலாளர்களை குறைத்து செலவை குறைப்பது தான் நோக்கம் என்று கூறியுள்ள நிர்வாகம் இந்த திட்டத்தை தொழிலாளர்கள் ஏற்கவில்லை என்றால் எப்படி தொழிலாளர்களை குறைக்கும் என்று குறிப்பிடவில்லை.