குடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன்? உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்


மத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்தியதால் தான், குடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.


பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வங்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.


எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மசோதாவை தாக்கல் செய்ய 293 எம்.பி.க்களும், எதிராக 82 எம்.பி.க்களும் வாக்களித்தனர். முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்கள் துன்புறுத்தப்பட்டதாக கூறினார்.


பல்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் அரசு, அகதிகளை மத அடிப்படையில் பாரபட்சமாக நடத்தியது என்றார் அவர். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பாரதீய ஜனதா அரசு இந்தியாவின் மதசார்பின்மையை குலைக்கிறது என்று குரல் எழுப்பினர்...


சட்ட திருத்தம் என்ன?


குடியுரிமை சட்டதிருத்த மசோதாவில், 2014 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறி வசிக்கும் இந்து, புத்த, சீக்கியர் மற்றும் பார்சிகள் உள்ளிட்ட முஸ்லீம் அல்லாதவர்களுக்கு சட்டபூர்வ குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று முஸ்லீம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என கூறப்படுவதற்கு பதிலளித்த அமித்ஷா, அவர்கள் சட்டரீதியாக விண்ணப்பித்தால், அது பற்றி பரிசீலிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.