ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றியமைக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை





சிவகங்கை: தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தொடக்க, நடநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வேட்பு மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. அப்பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், மறுபடியும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது

கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் அறிவித்தவுடன் 2016 செப்டம்பர் 7 முதல் அக்டேபார் முதல் வாரம் வரை ஒரு மாத காலத்திற்கு சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களிடம் வேட்பு மனு பெறுவது, பரிசீலனை செய்வது, சின்னம் ஒதுக்குவது வரை அனைத்து பணிகளையும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மேற்கொண்டோம். இந்நிலையில் தேர்தல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனு, காப்புத்தொகை அனைத்தும் முறைப்படி சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்து விட்டோம். இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாணை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பணிகளை நேர்மையாகவும், எவ்வித தயக்கமுமின்றி ஏற்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட மதிப்பூதியத்தை வழங்க வேண்டுமென பலமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியாற்ற உள்ள நிலையில் ஏற்கனவே பணியாற்றியமைக்கு உரிய ஊதியத்தை மாநில தேர்தல் ஆணையம் வழங்க வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.